×

தாம்பரத்தில் சட்ட விரோதமாக இயங்கும் டாஸ்மாக் கடையை திறக்க கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தாம்பரத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை திறக்க தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை தாம்பரம் சானடோரியம் மற்றும் ஜிஎஸ்டி பிரதான சாலையை இணைக்கும் இடத்தில் கடந்த 2012 முதல் 2017ம் ஆண்டு வரை டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு பின்னர் இந்த கடை மூடப்பட்டது. ஆனால், தற்போது அதே இடத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. அதனை மூட உத்தரவிட கோரி தாம்பரத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், சொத்து வரி செலுத்தாமல் சட்ட விரோத கட்டிடத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இதனால் தாம்பரம் டாஸ்மாக் கடை சானடோரியம் ரயில் நிலையம் வரும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. இந்த கடையினால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலின் காரணமாக சித்தா-காசநோய் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. மேலும், கோயில்கள், பள்ளிகளும் அருகே இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ் குமார் மற்றும் பி.டி ஆஷா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை திறக்க தடை விதித்தனர். மேலும், இதுகுறித்து ஜூன் 14ம் தேதிக்குள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தனர்.

Tags : shop ,Taskmak ,Tampa ,High Court , Tasmah Shop, High Court
× RELATED செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைத்த 3 கடை உரிமையாளர்களுக்கு அபராதம்